அமெரிக்க அதிபர் சென்ற இடத்தில் தாக்குதல் நடத்திய ரஷ்யா..!

ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் இன்று 32-வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இன்று உக்ரைனின் மேற்கு பகுதியில் உள்ள லீவ் நகரை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போலந்து சென்ற நிலையில், அதன் அருகேயுள்ள பகுதியில் தாக்குதல் நடைபெற்றுள்ளது. பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்யா, அந்த நாட்டின் ராணுவ நிலைகளை முதலில் குறிவைத்து தாக்கியது. கடந்த சில நாட்களாக குடியிருப்புகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டன.
இந்நிலையில், உக்ரைனின் மேற்கு எல்லை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பயணம் மேற்கொண்டார். இச்சூழலில் மேற்கு பகுதியில் உள்ள லீவ் நகரை குறிவைத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. எரிபொருள் கிடங்கு மற்றும் ராணுவ தொழிற்சாலையை குறிவைத்து ரஷ்யா நடத்திய இந்த தாக்குதலில் 5 பேர் காயமடைந்ததாக லீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.