இந்தியா – ரஷ்யா நல்ல நண்பர்கள்…. ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாரவ் பெருமிதம்..

இந்தியாவும், ரஷ்யாவும் பல தடைகளை தாண்டி இன்றும் நட்பு நாடக மிக நெருக்கமாக இருப்பது மகிழ்ச்சி என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாரவ் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாரவ் (Sergey Lavrov) 2 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் இன்று அவர் ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நட்பு மற்றும் வர்த்தகம் பற்றி பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய செர்கே லாரவ், உக்ரைன் விவகாரத்தில் இந்தியாவின் நடுநிலை தன்மைக்கு பாராட்டுக்கள். பிரதமர் நரேந்திர மோடிக்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்கள் தெரிவிக்க சொன்னார் என பேசியவர், அதை தொடர்ந்து இந்தியா – ரஷ்யா அனைத்து துறையிலும் இணைந்து பணியாற்றுவோம் என உறுதி அளித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் உள்ள சுதந்திரம், மற்றும் அடிப்படைக் கொள்கைகள் போன்றவையே நம்மை பெரிய நாடாகவும், சிறந்த விசுவாசமான நண்பர்களாகவும் இருக்க செய்துள்ளது.
இந்தியா, ரஷ்யாவிடம் இருந்து எந்த பொருளை வாங்க விரும்பினாலும் அதை நாங்கள் வழங்க தயாராக இருக்கிறோம். ரஷ்ய நாணயம் ரூபிள் கொண்டுதான் பல நாடுகள் ரஷ்யாவிடம் வர்த்தகம் செய்து வருகிறது.
ஆனால் இந்தியாவை பொறுத்தவரை இந்திய ரூபாய் மதிப்பை கொண்டு ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் உட்பட எந்த பொருள் வாங்க முன்வந்தாலும், அதுகுறித்து பரஸ்பரம் விவாதித்து சாதகமான முடிவுகள் எடுப்போம் என்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் உறுதி அளித்தார். செர்கே லாரவ் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.