இலங்கையில் அவசரநிலை பிரகடனம்.. அடுத்து என்ன நடக்குமென மக்கள் அச்சம்

கொரோனா பெருந்தொற்றால் கடும் பொருளாதார சரிவை சந்தித்து வரும் இலங்கையில்,  அத்தியாவசிய பொருட்களின் விலை முதல் எரிபொருள்களின் விலை வரை அனைத்தும் உயர்ந்துள்ளதால் மக்கள் பெரும் அவதியில் உள்ளனர்.

இந்நிலையில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை எதிர்த்து அதிபர் கோத்தபய ராஜபக்சே  மாளிகை முன்பு நேற்று முன்தினம்  மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட  மக்களை அங்கிருந்த போலீசார் புகை குண்டு வீசி தடுத்து நிறுத்தினர். இதன் விளைவாக இலங்கை தலைநகர்  கொழும்பு மற்றும் சில முக்கிய நகரங்களில்  ஊரடங்கை அமல்படுத்த உத்தரவிட்டார் அதிபர் ராஜபக்சே. மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெறாமல் இருக்க தலைநகர் கொழும்பு முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலைமையை சரி செய்யவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நாட்டின் அமைதியை பாதுகாக்கவும், இலங்கை அரசுக்கு எதிராக நடக்கும்  போராட்டங்களை குறைக்கவும் அதிபர் கோத்தபய ராஜபக்சே நேற்று இரவு அவசர நிலையை பிரகடனப்படுத்தினார். 

இதுகுறித்து கோத்தபய ராஜபக்சே கூறுகையில் , அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று  தெரிவித்தார். இலங்கையில் விலைவாசி உயர்வு, தொடர் மின்வெட்டு மற்றும்  எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவைகளை கட்டுக்குள் கொண்டுவர இலங்கை அரசு பல நாடுகளுடன்  தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 

அந்நியச் செலாவணி பற்றாக்குறை காரணமாக  கச்சா எண்ணெய் வாங்க முடியாத நிலையில்  இலங்கை அரசுக்கு  இன்று 40,000 டன் டீசல் கொடுத்து உதவுகிறது இந்திய அரசாங்கம்.  

Leave a Reply

Your email address will not be published.