அமெரிக்காவின் எதிர்ப்பை மீறி ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கும் இந்தியா..!

ரஷ்யா- உக்ரைன் போரின் எதிரொலியாக கடந்த சில தினங்களாக கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து சர்வதேச அரங்கில் உயர்ந்து வருகிறது. தொடர்ந்து அதிகரித்து வரும் கச்சா எண்ணெய் விலையினால் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் நாளுக்கு நாள் ராக்கெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. மேலும், எரிபொருட்களின் விலை உயர்வின் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு தீர்வு காண மத்திய அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. அமெரிக்காவின் கடும் எதிர்ப்பை மீறி இந்த முடிவை இந்தியா எடுத்துள்ளது.

இந்தியாவுக்கு தரமான உரால் ரக கச்சா எண்ணெயை போருக்கு முந்தைய விலையில் இருந்து 35 டாலர் குறைவாக வழங்க ரஷ்யா முன்வந்ததாக தகவல்கள் வெளியாகின. ரஷ்ய அமைச்சர் செர்கை லாவ்ரோவின் டெல்லி வருகையின் போது இது குறித்து பேசப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கச்சா எண்ணெயை ரஷ்யாவிடமிருந்து வாங்குவதை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதி செய்துள்ளார். எனினும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதை அமெரிக்கா கடுமையாக எதிர்த்து வருகிறது. இதனால் ரஷ்யாவுக்கு தாங்கள் விதித்த பொருளாதார தடைகள் பலனளிக்காமல் போகும் என அமெரிக்கா கருதுகிறது.

நேற்று முன்தினம் வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷவர்தனுடன் பேசிய அமெரிக்க தேசிய துணை பாதுகாப்பு ஆலேசாகர் தலீப் சிங், இந்தியாவில் சீனா அத்துமீறும் போது ரஷ்யா உதவிக்கு வராது என தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ரஷ்யாவை வர்த்தக ரீதியாக சார்ந்திருப்பதை குறைத்துக்கொள்ளுமாறு அண்மையில் டெல்லி வந்திருந்த இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் லிஸ் டிரஸ் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published.