மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தடுப்பூசி அறிவிப்பு திடீர் வாபஸ்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்ற அறிவிப்பை கோயில் நிர்வாகம் வாபஸ் பெற்றுள்ளது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப் படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில், மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே உருமாறிய கொரோனாவான, ஓமைக்ரான் இப்போது அச்சுறுத்தி வருகிறது. அதைத் தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் நிர்வாகம் அறிவித்தது. வரும் 13 ஆம் தேதி முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி என கோயில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. கோயிலுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த அறிவிப்பை நிர்வாக காரணங்களுக்காக கோயில் நிர்வாகம் திரும்ப பெறுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.நிர்வாக காரணங்களுக்காக அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டதாகவும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வழக்கம்போல் நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் எனவும் மதுரை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணைஆணையர் சி.குமரதுரை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *