இவர்களோடு இன்னொரு உலகக் கோப்பை விளையாட வேண்டும்…ஹர்பஜன் சிங் ஓபன் டாக்..!

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் அண்மையில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வினை அறிவித்தார். இந்நிலையில், இன்று இந்திய அணிக்காக மற்றொரு உலக கோப்பை போட்டியினை விளையாட வேண்டும் என தெரிவித்துள்ளார். அந்த அணியில் தன்னுடைய சக வீரர்களாக வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங் மற்றும் கௌதம் கம்பீர் இருக்கவேண்டும் என மனம் திறந்துள்ளார்.

இந்திய அணியின் 2007-ஆம் ஆண்டு உலக கோப்பை வென்ற டி20 அணியில் ஹர்பஜன் சிங் இடம் பெற்றிருந்தார். அதேபோல 2011ஆம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணியிலும் அவர் இடம் பெற்றிருந்தார். அண்மையில் தனது ஓய்வு முடிவினை ஹர்பஜன் சிங் அறிவித்தார். அதன்பின், அவர் அரசியலில் இணையப் போகிறார் என்ற தகவல்களும் வலம் வந்தன. இருப்பினும், ஹர்பஜன் தரப்பிலிருந்து அதுபோன்ற எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஹர்பஜன் சிங் தனது சக வீரர்களான யுவராஜ் சிங், வீரேந்திர சேவாக் மற்றும் கௌதம் கம்பீர் ஆகியோருடன் ஒரு உலக கோப்பை போட்டி விளையாட வேண்டும் எனக் கூறியிருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இது குறித்து பேசிய அவர், 2011ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் விளையாடும்போது என்னுடைய வயது 31. அப்போது நான் நல்ல உடல் தகுதியுடன் இருந்தேன். அதைப் போல 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கும் நல்ல உடல் தகுதியுடன் இருந்தேன். இருப்பினும், நான் அணியில் எடுக்கப்படாது ஏனென்று தெரியவில்லை எனவும் அவர் தெரிவித்தார். நான் அணியில் இடம் பெறாததற்கு பின்னணியில் யார் இருக்கிறார் என தெரியவில்லை. இப்போது தெரிந்தாலும் அதைப்பற்றி பேசி பயனில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், என்னுடைய சக வீரர்களான யுவராஜ் சிங் மற்றும் வீரேந்திர சேவக் அவர்களும் 2015 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டிகளுக்கு முழு உடல் தகுதியுடன் இருந்தனர். ஆனால், அவர்களும் அணியில் இடம்பெறவில்லை என ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *