டி-20 தொடரை கைப்பற்றிய இந்திய அணி..!

இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது. நேற்று இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி-20 தொடரை வென்றுள்ளது.

முன்னதாக, டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து, இலங்கை அணி தனது பேட்டிங்கை தொடர்ந்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக நிசங்கா மற்றும் குணதிலகா ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடி இலங்கை அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அமைத்துத் தந்தது. இலங்கை அணி 67 ரன்னில் தனது முதல் விக்கெட்டை இழந்தது. அதன்பின் களமிறங்கிய வீரர்கள் வரிசையாக விக்கெட்டுகளை பறிகொடுத்து வெளியேறினர்.

அதன்பின் நிசங்காவுடன் ஜோடி சேர்ந்தார் கேப்டன் ஷானகா. இந்த ஜோடி சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. அதிரடியாக விளையாடிய நிசங்கா அரைசதம் அடித்து அசத்தினார். அவர் 53 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய கேப்டன் ஷானகா 19 பந்துகளில் 47 ரன்கள் குவித்தார். அதில் இரண்டு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து, 184 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கியது இந்திய அணி. முதல் ஓவரிலேயே கேப்டன் ரோகித் சர்மா போல்டாகி அதிர்ச்சி அளித்தார். அதன்பின் இஷான் கிஷன் 16 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேற இந்திய அணி சிறிது தடுமாறியது. அதன்பின் ஜோடி சேர்ந்த ஸ்ரேயஸ் ஐயர் மற்றும் சஞ்சு சாம்சன் பொறுப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் அரைசதம் விளாசினார். அவர் 44 பந்துகளில் 74 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்சர்கள் அடங்கும். நிதானமாக விளையாடிய சஞ்சு சாம்சன் 39 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

அதன்பின் களமிறங்கிய இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் அதிரடியால் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. அவர் வெறும் 18 பந்துகளில் 45 ரன்கள் குவித்தார். அதில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் அடங்கும். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி-20 தொடரை இந்திய அணி 2-0 என கைப்பற்றியது.

இந்திய அணியின் சார்பில் சிறப்பாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *