ஜெயலலிதா பாணியில் அதிரடி காட்டிய ஓபிஎஸ் – இபிஎஸ்… அரண்டுபோன அண்ணாமலை!

annamalai

அதிக இடம் கேட்டு நெருக்கடி கொடுத்ததால் பாஜகவை கழட்டிவிட அதிமுக திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என தமிழகத்தில் மொத்தம் உள்ள649 அமைப்புகளுக்கு ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19 ஆம் தேதி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19இல் வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, 22ம் தேதி முடிவுகள் அறிக்கப்பட உள்ளன. இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெற்று வரும் நிலையில், திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.

இந்த தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணிகளுடன் களமிறங்க உள்ள நிலையில், அதிமுகவும் பாஜகவுடன் தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இதைத் தவிர பாமக, அமமுக, தேமுதிக மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் ஆகிய கட்சிகள் தனித்து நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் களமிறங்குகின்றன.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடத்த ஆர்ப்பாட்டத்தில், சட்டமன்றத்தில் ஆண்மையோடு பேச ஒரு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட இல்லை என பாஜகவின் துணை மாநில தலைவரான நயினார் நாகேந்திரன் பேசியது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இதனையடுத்து கடுங்கோபத்தில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு போன் செய்து அண்ணாமலை சரண்டர் ஆனதாகவும், நயினார் பேச்சுக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லை என சொல்லி ‘சாரி’ கேட்டதும் அனைவரும் அறிந்தது.

இருப்பினும் அதன் பின்னர் நடந்த தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் பாஜகவிடம் அதிமுக தொடர்ந்து பாராமுகம் காட்டி வருகிறது. நேற்று முன்தினம் கூட அதிமுகவுடன் 4 மணி நேரம் அண்ணாமலை பேச்சுவார்த்தை நடத்திய போதும், கேட்ட தொகுதிகளை ஒதுக்க ஓபிஎஸ் – இபிஎஸ் கறாராக மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. குறைந்தது 20 சதவீத இடங்களை பாஜக கேட்டுள்ளது, ஆனால் அதிமுகவோ 8 முதல் 10 சதவீதம் தான் தர முடியும் என பாதிக்கு பாதி இடங்களை குறைத்துள்ளது.

இதனால் அதிருப்தி அடைந்த பாஜக இன்று பேச்சுவார்த்தையில் ஈடுபடவில்லை. அதற்கு மாறாக அண்ணாமலை திருச்சியில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். கடலூர் மாநகராட்சி, தர்மபுரி, விழுப்புரம் நகராட்சிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடலூர் மாநகராட்சியில் 43 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளது. அதேபோல நகராட்சிகளில் சிதம்பரம், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, விருத்தாசலம், திட்டக்குடி, விழுப்புரம், திண்டிவனம், தர்மபுரி நகராட்சியில் 31 வார்டுகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அதிமுக வெளியிட்டுள்ளது. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பாணியில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது, பாஜகவினரை அரண்டு போக வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *