ஜெயக்குமார் வீட்டிற்குள் திடீரென நுழைந்த போலீஸ்… பரபரப்பு வீடியோ!

தமிழக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நேற்று முந்தினம் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவின் போது ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே சில இடங்களில் பிரச்னைகள் வெடித்தன. அந்த வகையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் அதிமுக-வினர் ராயபுரத்தில் கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி, திமுக நிர்வாகி ஒருவரை அரை நிர்வாணப்படுத்தி சட்டையால் கைகளைக் கட்டி இழுத்துச் சென்ற சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

சென்னை ராயபுரம் பகுதியில் 49-வது வார்டில் மக்கள் நேற்று வரிசையில் நின்று தங்கள் வாக்குகளைச் செலுத்திக் கொண்டிருந்தனர். ஆளுங்கட்சியினர் யாரும் கள்ள வாக்குகளைச் செலுத்தி விடக்கூடாது என்பதில் முனைப்புக் காட்டிய அதிமுக-வினர், அதிக அளவில் வாக்குச்சாவடிக்கு அருகில் முகாமிட்டிருந்தனர். அப்போது அவர்கள், ஒருவரை ஏற்கெனவே வேறொரு வாக்குச்சாவடியில் வாக்களித்துவிட்டு, கள்ள வாக்கு செலுத்த வந்ததாகக் கூறி சுற்றிவளைத்தனர். இந்த தகவலறிந்து அந்த இடத்துக்கு விரைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அந்த நபரிடம் வாக்குவாதம் செய்தார். பின்னர், அங்கிருந்த அதிமுக-வினரிடம் அந்த நபரின் கைகளைக் கட்டி காவல்நிலையத்தில் ஒப்படைக்குமாறு கூறினார். அதையடுத்து, அதிமுக-வினர் அந்த நபரைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர், அதிமுக-வினர் அந்த நபரின் சட்டையைக் கழற்றி அவரை அரை நிர்வாணப்படுத்தி இழுத்துச் சென்றனர்.

இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் 40-க்கும் மேற்பட்டோர் மீது சட்ட விரோதமாகக் கூடி கலகம் செய்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் தண்டையார்பேட்டை காவல்துறை வழக்கு பதிவுசெய்தது. இதனையடுத்து இன்று இரவு ஜெயக்குமார் வசித்து வரும் பட்டினப்பாக்கம் வீட்டுக்குச் சென்ற காவல்துறையினர், அவர் கட்டியிருக்கும் லுங்கியை கூட மாற்றிக்கொள்ள விடாமல் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஜெயக்குமார் கார் டிரைவர் தி.மு.க., வினர் மீது புகார் கொடுத்ததையடுத்து 10 தி.மு.க., வினர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *