தமிழ் சினிமா வரலாறு பாகம் இரண்டு (1947-1977) : பராசக்தி கதை

Parasakthi_Newslite_Spl

பராசக்தி கதையில் அப்படி என்ன விசேஷம் என்றால் அதன் கதை அமைப்பு .

எந்த ஒரு திரைப்படமும்  காவியமாக வரலாற்றின் எல்லா காலங்களிலும் கொண்டாடப்பட வேண்டுமானால் அது அந்த சமூகத்தின் வரலாற்றை  பேச வேண்டும் குறிப்பிட்ட காலகட்டத்தை உள்ளடக்கம் இரண்டிலும் பிரதிபலிக்க வேண்டும். அவ்வகையில் பராசக்தியின் காலம் கடந்த வெற்றிக்கு கதை அமைப்பு ஒரு முக்கிய காரணம், அன்றைய தமிழ் சமூகத்தை பாதியாக அறுத்தால் அதில் என்ன ரத்தம் கொட்டுமோ, அதே ரத்தம் பராசக்தியின் திரைக்கதை அமைப்பில் சினிமாவில் கொட்டியது, அதற்கு பேருதவியாக இருந்தது கருணாநிதியின் வசனம் சிவாஜியின் நடிப்பு.

மதுரையில் நடக்கும் தங்கை கல்யாணியின் திருமணத்துக்காக ரங்கூனிலிருந்து புறப்படுகிறார்கள் மூன்று அண்ணன் தம்பிகள் ஞானசேகரன், சந்திரசேகரன், குணசேகரன். ஆனால் இரண்டாம் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காரணத்தால் ஒரே ஒருவர்  மட்டும் பயணம் செய்ய வாய்ப்பு கிட்ட குணசேகரன் மட்டும் புறப்படுகிறான்.

போர் காரணமாக பல மாதங்கள் தாமதமாகி சென்னை வந்தடைகிறது கப்பல். மதுரை ரயிலுக்கு டிக்கட் கிடைக்காததால் ஹோட்டலில் ஒரு நாள் தங்குகிறார் குணசேகரன். அங்கு ஒரு வஞ்சியால் வஞ்சிக்கப்பட்டு தன் பணம் அனைத்தையும் இழக்கிறார். பணம் இல்லாமல், பட்டினியால் வாடி, பிச்சை எடுத்து, பைத்தியமாக நடித்து தன் பசியைப் போக்கிக் கொள்கிறார் குணசேகரன்.

கடைசியில் ஒரு வழியாக தன் சொந்த ஊருக்குச் செல்கிறார். அங்கே கணவனை இழந்து, தந்தையையும் இழந்து கைக்குழந்தையுடன் குடிசை வீட்டில் தங்கி இட்லி வியாபாரம் செய்து வாழ்ந்து வருகிறாள் தங்கை கல்யாணி.

மாமன் வருவான் நிலைமை மாறும் என்று குழந்தைக்கு ஆறுதல் சொல்லும் கல்யாணியின் நம்பிக்கையில் மண் அள்ளிப் போட விரும்பாமல் அவளிடமும் பைத்தியமாக நடித்து, அவளுக்கு காவலாக இருக்கிறான் குணசேகரன்.

வறுமையை பயன்படுத்தி கல்யாணியை நாசமாக்க துடிக்கிறான் அந்த ஊர் மைனர். குணசேகரன் அவனை உதைக்கிறான். அவளை வேலைக்கு அமர்த்தி படுக்கைக்கு அழைக்கிறான் நாட்டாமை. அவனிடமிருந்து தப்பித்து தன் அண்ணன் சந்திரசேகரன் வீட்டு விருந்துக்கு சென்று தன் பிள்ளை ஆறு நாள் பட்டினி கிடப்பதாகச் சொல்லி உணவு கேட்கிறாள் கல்யாணி. காலைப் பிடிக்கும் அவளை தங்கையென்று தெரியாமல் எட்டி உதைக்கிறான் அண்ணன்.

மனம் நொந்து பராசக்தி கோயிலுக்குப் போகிறாள் கல்யாணி. அவளை மானபங்க படுத்த முயல்கிறான் கோயில் பூசாரி. அவனிடமிருந்து தப்பித்துச் செல்லும் கல்யாணி. இந்த உலகில் வாழ விருப்பமில்லாமல், தன் குழந்தையை ஆற்றில் வீசி விட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள்.

ஆனால் காவலரால் காப்பாற்றப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறாள். அங்கு அவளை இன்னாரென்று அறிகிறான் நீதிபதியான அண்ணன் சந்திரசேகரன். அதே நேரத்தில் தங்கைக்காக கோயில் பூசாரியை தாக்கிவிட்டு நீதிமன்றத்தில் குற்றவாளியாக நிற்கிறான் குணசேகரன்.

குணசேகரனின் உணர்ச்சி மிக்க நீதிமன்ற வசனத்தின் முடிவில், கல்யாணியின் குழந்தை குணசேகரனின் காதலியால் காப்பாற்றப்பட்டது தெரிய வருகிறது. வழக்கு முடிவுக்கு வர கல்யாணியும், குணசேகரனும் சந்திரசேகரனிடம் சேர்கிறார்கள். பிச்சைக்காரர்கள் மாநாட்டிற்கு பொருளுதவி கேட்டு வரும் ஞானசேகரனும் அவர்களுடன் வந்து சேர்ந்து விடுகிறார். பிரிந்தவர்கள் ஒன்று சேர முடிவில் சுபம்.

 படத்தின் வெற்றிக்கு காரணம் யார் .இயக்குனர்கள் கிருஷ்ணன் பஞ்சுவா? ஒளிப்பதிவாளர் மாருதி ராவ்? அருமையான பாடல்களுடன் இசை அமைத்த ஆர்.சுதர்சனம் ? என பெரு விவகாரம்  எழுந்தாலும்   இறுதியில் சிவாஜியின் நடிப்பு கலைஞரின் வசனம் என பட்டிமன்றமே  நடத்தும் அளவுக்கு இருவரது திறமையும் படத்தை மிகப்பெரிய வெற்றிக்கு காலத்தின் அழியாத புகழுக்கு அழைத்துச் சென்றன.

குறிப்பாக நடிகர் திலகத்தின் நடிப்பு புதுமுகம் என அனைவருமே மெய்சிலிர்க்கும் அளவுக்கு வெகு இயல்பாகவும், தேவைப்படும் உணர்ச்சியை பாத்திரத்தின் சுபாவத்துக்கு ஏற்றார் போல மிகுந்த ஆற்றலோடும் வெளிப்படுத்தியது. சிவாஜியின் ஆகச்சிறந்த நடிப்பில் உருவான படங்களில் பராசக்தியின் இறுதிகாட்சி கட்டாயம்  இடம் பிடிக்கும் அளவுக்கு சிறப்பாக அமைந்திருந்தது .

படத்தின் கலைஞரின் வசனம் தீப்பொறி பறந்தது. இன்று வரை தமிழ் சினிமாவில்  90 வருட பேசும் பட  வரலாற்றில் எத்தனையோ  வெற்றி படங்கள் வசனத்துக்ககாவே ஓடியிருந்தாலும்  விருதுகளை குவித்திருந்தாலும் மற்றவற்றுக்கு எல்லாம் மகுடம் சூட்டும் படமாக அமைந்து தான் பராசக்தி. இந்த படத்தின் வசனத்தில் இருந்த திராவிட இயக்க கருத்துக்களும், சமூக அக்கறையும் தான் அவரை நேரடியாக கொண்டுபோய் 18 வருடத்தில்  தமிழ்நாட்டின் முதலமைச்சராகவே  உட்கார வைத்தது என்றால் மிகையில்லை.

அதிலும் குறிப்பாக அந்த கடைசி நிமிட நீதிமன்ற வசனங்கள்  தமிழ் சினிமாவின் கல்வெட்டில் பொரிக்க தக்கவையாக இருந்து என்றால் மிகையில்லை.

“நீதிமன்றம் விசித்திரம் நிறைந்த பல வழக்குகளை சந்தித்திருக்கிறது. புதுமையான பல மனிதர்களை கண்டிருக்கிறது”. 

“ஆனால் இந்த வழக்கு விசித்திரமும் அல்ல”. 

“வழக்காடும் நானும் புதுமையான மனிதன் அல்ல”. 

“வாழ்க்கை பாதையிலே சர்வ சாதாரணமாக தென்படும் ஜீவன்தான் நான்”. 

“கோவிலிலே குழப்பம் விளைவித்தேன்”.

 “பூசாரியை தாக்கினேன்”. 

“குற்றம் சாட்ட பட்டிருக்கிறேன் இப்படியெல்லாம்”.

 “நீங்கள் எதிர்பார்ப்பீர்கள் நான் இதை எல்லாம் மறக்க போகிறேன் என்று. இல்லை. நிச்சயமாக இல்லை”.

“கோவிலிலே குழப்பம் விளைவித்தேன். கோவில் கூடாதென்பதற்காக அல்ல”.

“கோவில் கொடியவரின் கூடாரமாக இருக்க கூடாதென்பதற்காக பூசாரியை தாக்கினேன்”. 

“அவன் பக்தன் என்பதற்காக அல்ல”. 

“பக்தி பகல்வேஷமாய் ஆகி விட்டதை கண்டிப்பதற்காக”. 

“உனக்கேன் இவ்வளவு அக்கறை”. 

“உலகத்தில் யாருக்கு இல்லாத அக்கறை என்று கேட்பீர்கள்”. 

“நானே பாதிக்கப்பட்டேன். நேரடியாக பாதிக்கப்பட்டேன்”.

“சுயநலம் என்பீர்கள்”.

“என் சுயநலத்திலே பொதுநலமும் கலந்திருகின்றது.ஆகரத்துக்காக அழுக்கை சாப்பிட்டு தடாகத்தை சுத்தப்படுத்துகிறதே மீன் அதைப்போல”.

“என்னை குற்றவாளி என்கிறார்களே”.

“இந்த குற்றவாளியின் வாழ்க்கை பாதையிலே கொஞ்ச தூரம் பின்னோக்கி நடந்து பார்த்தால் அவன் கடந்து வந்துள்ள காட்டாறுகள் எவ்வளவு என்று தெரியும்”.

“பாட்டொலிக்கும் குயில்கள் இல்லை என் பாதையில்”.

“படமெடுக்கும் பாம்புகள் நெளிந்திருகின்றன”.

“தென்றலை தீண்டியதில்லை நான்”.

“தீயை தாண்டியிருக்கிறேன்”.

“கேளுங்கள் என் கதையை”.

“தீர்ப்பு எழுதுவதற்க்கு முன் தயவு செய்து கேளுங்கள்”.

“தமிழ்நாட்டிலே இந்த திருவிடத்திலே பிறந்தவன் நான்’.

“பிறக்க ஒரு நாடு”.

“பிழைக்க ஒரு நாடு”.

“தமிழ்நாட்டின் தலையெழுத்துக்கு நான் விதிவிலக்கா?’

“ரங்கூன் என் உயிரை வளர்த்தது”.

“உயந்தவன் ஆக்கியது”.

“திருமண கோலத்திலே இருக்கும் என் தங்கையை காண வந்தேன்”.

“மோசடி வழக்கிலே ஈடுபட்டு குற்றவாளி கூண்டிலே உங்கள் முன்னால் நிற்கிறாளே இதோ இந்த ஜாலக்காரி ஜாலி”.

“இவள் வலையிலே விழுந்தவர்களில் நானும் ஒருவன்”.

“பணப்பெட்டியை பறி கொடுத்தேன்”.

“பசியால் திரிந்தேன்”.

“மெலிந்தேன்”.

“கடைசியில் பைத்தியமாக மாறினேன்”.

“காண வந்த தங்கையை கண்டேன் கண்ணற்ற ஓவியமாக”.

“ஆம்”.

“கைம்பெண்ணாக”.

“தங்கையின் பெயரோ கல்யாணி”.

“மங்களமான பெயர்”.

“ஆனால் கழுத்திலோ மாங்கல்யம் இல்லை”.

“செழித்து வாழ்ந்த குடும்பம் சீரழிந்து விட்டது”.

“கையிலே பிள்ளை”.

“கண்ணிலே நீர்”.

“கல்யாணி அலைந்தாள்”.

“கல்யாணிக்காக நான் அலைந்தேன்”.

“கல்யாணிக்கு கருணை காட்டினார்கள் பலர்”.

“அவர்களிலே காளையர் சிலர் கைமாறாக அவள் காதலை கேட்டனர்”.

“கொலை வழக்கிலே சம்பந்தப்பட்டு கைதியாக நிற்கிறானே இதோ இந்த கொடியவன் வேலு”.

“இவன் பகட்டால் மயக்க முயன்றான் என் தங்கையை”.

“நான் தடுத்திறாவிட்டால் என் தங்கை அப்போதே தற்கொலை செய்து கொண்டிருப்பாள்”.

“கடவுள் பக்தர்களும் கல்யாணியை காப்பாற்ற வந்தார்கள்”.

“ப்ரதி உபகாரமாக அவள் கடைக்கண் பார்வையை கேட்டு”.

“அவளில் தலைமையானவன் இதோ இந்த பூசாரி”.

“கல்யாணியின் கற்பை காணிக்கையாக கேட்டிருக்கிறான்”.

“பராசக்தியின் பெயரால்”.

“உலக மாதாவின் பெயரால்”.

கல்யாணி உலகத்தில் புழுவாக துடித்தப்படியாவது உயிரோடு இருந்திருப்பாள்”.

“அவளை தற்கொலை செய்து கொள்ள தூண்டியது இதோ இந்த பூசாரி தான்”.

“தன் குழந்தையை இந்த இரக்கமற்ற உலகத்திலே விட்டுச் செல்ல அவள் விரும்பவில்லை”.

“ஆதரவற்று தன் குழந்தை துடித்துச் சாவதை அவள் விரும்பவில்லை”.

“அவளே கொன்றுவிட்டாள்”.

“விருப்பமானவர்களை கொல்வது விந்தையல்ல”.

“உலக உத்தமர் காந்தி”.

“அஹிம்சா மூர்த்தி”.

“ஜீவகாருண்ய சீலர்”.

“அவரே நோயால் துடித்துக்கொண்டிருந்த கன்று குட்டியை கொன்று விட சொல்லியிருக்கிறார்”.

“அது கஷ்ட முறுவதை காண சகிக்காமல்”.

“அதே முறையைத்தான் கையாண்டிருக்கிறாள் கல்யாணி”.

“இது எப்படி குற்றமாகும்”.

“வெளிநாட்டில் இருந்து திரும்பிய ஒரு தமிழனுக்கு வாழ்வதற்கு வழி இல்லை”.

“தமிழ்நாட்டிலே பிறந்த ஒரு பெண்ணுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பில்லை”.

“என் தங்கை மட்டும் கொஞ்சம் விட்டு கொடுத்திருந்தால்”..

“கோடீஸ்வரனின் வீட்டு பள்ளியறையிலே ஒரு நாள்”.

“மானத்தை விலை கூறியிருந்தால் மாளிகை வாசியின் மடியிலே ஒரு நாள்”.

“இப்படி ஓட்டியிருக்கலாம் நாட்களை”.

“இதைத்தானா இந்த நீதிமன்றம் விரும்புகிறது”.

“பகட்டு என் தங்கையை விரட்டியது”.

“பயந்து ஓடினாள்”.

“பணம் என் தங்கையை துரத்தியது”.

“மீண்டு ஓடினாள்”.

“பக்தி என் தங்கையை பயமுறுத்தியது”.

“ஓடினாள்”.

“ஓடினாள்”.

“வாழ்க்கையின் ஓரத்திற்கே ஓடினாள்”.

“அந்த ஓட்டத்தைத் தடுத்திருக்க வேண்டும்”.

“வாட்டத்தை போக்கியிருக்க வேண்டும் இன்று சட்டத்தை நீட்டுவோர்”.

“செய்தார்களா”.

“வாழ விட்டார்களா என் கல்யாணியை”.

“வக்கீல்: குற்றவாளி யார் வழக்கிற்கோ வக்கீலாக மாறுகிறார்”.

“இல்லை யார் வழக்கிற்கும் இல்லை”.

“அதுவும் என் வழக்குதான்”.

“என் தங்கையின் வழக்கு”.

“தங்கையின் மானத்தை அழிக்க எண்ணிய மாபாவிக்கு புத்தி புகட்ட அண்ணன் ஓடுவதில் என்ன தவறு”.

“கல்யாணி தற்கொலை செய்து கொள்ள முயன்றது ஒரு குற்றம்”.

“குழந்தையை கொன்றது ஒரு குற்றம்”.

“நான் பூசாரியை தாக்கியது ஒரு குற்றம்”.

“இத்தனை குற்றங்களுக்கும் காரணம் யார்?”

“யார்?”

“யார் காரணம்?”

“கல்யாணியை கஞ்சிக்கு வழி இல்லாதவளாக அலைய விட்டது யார் குற்றம்.”

“விதியின் குற்றமா? அல்லது விதியை சொல்லி வயிர் வளர்க்கும் வீணர்கள் குற்றமா?”

“பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டத்தை வளர விட்டது யார் குற்றம்?”

“பஞ்சத்தின் குற்றமா? அல்லது பஞ்சத்தை மஞ்சத்திற்க்கு வரவழைத்த வஞ்சகர்களின் குற்றமா?”

“கடவுள் பெயரால் காம லீலை நடத்தும் போலி பூசாரிகளை நாட்டிலே நடமாட விட்டது யார் குற்றம்?”

“கடவுளின் குற்றமா? அல்லது கடவுள் பெயரை சொல்லி காலஷேபம் நடத்தும் கயவர்கள் குற்றமா?”

“இந்த குற்றங்கள் களையப்படும் வரை குணசேகரன்களும், கல்யாணிகளும் குறைய போவதில்லை”.

“இதுதான் எங்கள் வாழ்க்கை ஏட்டில் எந்தப்பக்கம் புரட்டினாலும் காணப்படும் பாடம், பகுத்தறிவு, பயனுள்ள அரசியல் தத்துவம்”.

(தொடரும்)

– எழுத்தாளர். அஜயன் பாலா.

பின் குறிப்பு : ஆசிரியரின் தமிழ் சினிமா வரலாறு பாகம் ஒன்று 1916-1947 நாதன் பதிப்பகம் வெளியீடாக நூலாக வெளி வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து  இரண்டாம் பாகமாக இத்தொடர் 1948 துவங்கி தமிழ் சினிமாவின் முக்கிய வரலாற்றுத்தடங்களை விவரிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *