பெரியார் பள்ளி: மாணவர் கலைஞர் – அடங்குற ஆளா அவரு..

ஊருல ஒரு குரூப் திரியும். வாட்ஸ்ஆப் குரூப் வரைக்கும் புகுந்து நம்ம வீட்டுக்கு வந்திடும்.

“இதெல்லாம் காலம் காலமா முன்னோர்கள் சொன்னது ப்ரோ. அதை கேலி பண்ணுனா மனசு புண்படும்ல”

“கேலி பண்ணுல ப்ரோ.. கேள்விதான் கேட்குறோம்”

“இல்ல ப்ரோ.. அடுத்தவங்க நம்பிக்கைப் பற்றி கேள்வி கேட்பதே மனசை புண்படுத்துற மாதிரிதான்” -இப்படி அட்வைஸ் பண்ணுற அந்த குரூப்தான், “நீ கோட்டாவுல சீட் வாங்குனவன்தானே… நீ என்ன ஆளு.. நீ இனிமே மாட்டுக்கறி திங்கக்கூடாது. ஒழுங்கா நாங்க சொல்றமாதிரி நடந்துக்க. இல்லைன்னா பாகிஸ்தானுக்குப் போ” -இப்படியெல்லாம் வாயால மனசை புண்படுத்துறதோடு, உடம்பையும் புண்படுத்துற அளவுக்கு மதவெறிக் கலவரத்தை உண்டாக்கும்.

அப்பப்ப எவனாவது வந்து செவுட்டுல நாலு அறை வுட்டாதான் அடங்கும். இப்பகூட மதவெறியோடு இன்னொரு மதத்தினரின் மனசை புண்படுத்தி, அரபு நாட்டுக்காரங்க அடிச்ச அடியில அந்த குரூப்புக்கு, பின்னாடி புண்ணாகிக் கிடக்குது. “மன்னிப்பு.. மன்னிப்பு..’னு கதறுது.

அரசியலில் இதெல்லாம் சகஜமப்பாங்குற மாதிரி, அந்த குரூப்புக்கு மன்னிப்பு கேட்பது ரொம்ப ரொம்ப சகஜம். அந்தமான் செல்லுலார் ஜெயிலில் அந்த சிறப்பான சம்பவத்தை ஒருத்தரு ஸ்டார்ட் பண்ணி வச்சாரு. அதிலேயிருந்து non-stopஆ 80 வருசமா, மன்னிப்பு புராணம்தான்.

நம்ம கிழவரு பெரியாரு ரூட்டே தனி. “போராட்டம் பண்ணுனா ஜெயிலில் போடுறியா? போட்டுக்க. ஆனா, நான் தொடர்ந்து போராட்டம்தான் பண்ணுவேன். தண்டனை கொடுக்குறியா கொடுத்துக்க. ஜெயிலுக்கெல்லாம் பயப்படமாட்டேன்” அப்படின்னா கோர்ட்டுலேயே தில்லா சொன்ன ‘தல’.

Tamil Nadu to mark Periyar's birth anniversary as 'Day of Social Justice':  CM Stalin | Latest News India - Hindustan Times

இந்தி எதிர்ப்பு போராட்டத்துல பெரியாரைக் கைது பண்ணி சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் நிறுத்துறாங்க. நீதிபதி முன்னாடி பெரியார் ஒரு ஸ்டேட்மெண்ட் கொடுக்குறாரு.

“நான் சம்பந்தப்படும் எந்த இயக்கமும் அல்லது கிளர்ச்சியும் அல்லது போராட்டமும் சட்டத்துக்கு உட்பட்டு, வன்முறை இல்லாமல்தான் இருக்கும். என்னுடைய பேச்சுகள் இதை விளக்கும். ஆனால் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியை அடக்குமுறை மூலம் ஒடுக்கிவிடக் காங்கிரஸ் அரசு கருதுகிறது. வீட்டுக்குள் திருடன் புகுந்தால் கையில் கிடைத்ததை எடுத்து அடிப்பேன் என முதல்மந்திரி(ராஜாஜி)யாரே பேசிவிட்டார். அடக்குமுறை காலத்தில் நீதி கிடைக்காது. மேலும், நீதிபதியவர்களே காங்கிரஸ் அரசுக்குக் கட்டுப்பட்டவர்; அதிலும் பார்ப்பனர். அதனால் இங்கு நியாயத்தை எதிர்பார்க்க முடியாது. எனவே எவ்வளவு அதிக தண்டனை தர முடியுமோ அதையும், ஜெயிலில் எவ்வளவு தாழ்ந்த வகுப்பு ஒதுக்க முடியுமோ அதையும் கொடுத்து இந்த விசாரணை நாடகத்தை முடித்து வைக்க வேண்டுமென வணக்கத்துடன் கேட்டுக் கொள்கிறேன்”ன்னாரு.

என்னா போடு… .. சும்மா தெறிக்குதுல்ல..

அந்தக் கிழவரோட தாடியும் தடியும் இப்பவும், ஏன் அந்த குரூப்பையும் அதோட ஸ்லீப்பர் செல்களையும் இப்பவும் பயமுறுத்துதுன்னு தெரியுதா?

அவர் தலைமையிலேதான் இயக்கம் படுபாய்ச்சலைக் காட்டுது. 1944ல் சேலம் மாநாட்டுல நீதிக்கட்சியும் சுயமரியாதை இயக்கமும் ஒண்ணு சேர்ந்து ‘திராவிடர் கழகம்’னு பேரு வந்தது. அந்தப் பேரு வைக்கிற தீர்மானத்தை முன்மொழிஞ்சவரு அறிஞர் அண்ணா. அதனால அதுக்கு அண்ணாதுரை தீர்மானம்னே பேரு.

சேலம் மாநாட்டுல திராவிடர் கழகம் உருவான நேரத்துல, திராவிட நடிகர் கழகம் சார்பில் கொள்கை பரப்புரை நாடகத்துல கலைஞர் நடிச்சிக்கிட்டிருக்காரு. அதற்கடுத்து, திருச்சியிலே ஒரு மாநாடு. கருஞ்சட்டைக்காரங்க ரயிலு, பஸ்ஸூன்னு கூட்டம் கூட்டமா கிளம்பிப் போறாங்க.

திருச்சி ரயில்வே ஜங்ஷன்ல ஒரு பையன், பெரியார் இயக்கத்தின் கொடியோடு, “தமிழ் வாழ்க.. பெரியார் வாழ்க.. அண்ணா வாழ்க”னு முழக்கம் போட்டுக்கிட்டே இங்கும் அங்குமா போறதை, ரயிலை விட்டு இறங்குனவங்க ஆச்சரியமா பார்க்குறாங்க. அந்தப் பையன்தான் நம்ம last bench ஸ்டூன்ட் கலைஞரு.

திருச்சிக்கு அப்புறமா நடந்த பாண்டிச்சேரி மாநாட்டுல கலைஞரோட நாடகம், மாஸ் காட்டுது. இந்தியாவை ஆளுற கட்சியை டயலாக்குல பிரிச்சி மேயுறாரு. தேசபக்தினு சொல்லி எப்படியெல்லாம் வேசம் போடுறாங்க. உள்ளுக்குள்ள மதவெறி- சாதி வெறி எந்தளவுக்கு அவங்ககிட்ட இருக்கு. ஊர் மக்களை எப்படி ஏமாத்துறாங்க. விலையைக் குறைக்குறேன். பணத்தைப் பெருக்குறேன்னு சொல்லிட்டு கள்ளநோட்டு-கறுப்புபணம்னு எப்படியெல்லாம் பதுக்குறாங்க. சாதா பணக்காரனை உலகப் பணக்காரனாகுற அளவுக்கு வளர்த்துட்டு, சராசரி மக்களை என்னா பாடு படுத்துறாங்க. -இது எல்லாத்தையும் நாடகத்துல தோல் உரிச்சிட்டாரு.

When Karunanidhi starred in the anti-Hindi agitation - Telegraph India

“இவனை உரிக்கணும்டா”னு அந்தக் கட்சிக்காரன் குறி வச்சிட்டான். பாண்டிச்சேரி ரோட்டுல நடந்து போய்க்கிட்டிருக்கும்போது, கலைஞரையும் நண்பர்களையும் சுத்தி வளைச்சிட்டாங்க. ஆளுக்கொரு திசையா ஓடுனாலும் தப்பிக்க முடியல. புதுசா வந்த ஊருல கிழக்கு மேற்கே தெரியாது. ஏதோ ஒரு திசையில ஓடி, ஒரு வீட்டுல போய் ஒளியுறாரு கலைஞர். அங்கேதான், அவரை அடிக்க ப்ளான் போட்ட ஒட்டுமொத்த எதிரி டீமும் இருக்கு. அடிச்சித் துவைச்சு, ஆள் அவுட்டுன்னு முடிவு பண்ணி, ஒரு சாக்கடை ஓரமா கலைஞரை தூக்கி வீசிட்டுப் போயிட்டாங்க.

யாரோ ஒரு அம்மா.. பாண்டிச்சேரியில குடியிருக்கிற தஞ்சாவூரைச் சேர்ந்த புண்ணியவாதி, “அய்யோ பாவமே..”னு கலைஞரைக் காப்பாத்திட்டாங்க. மறுபடியும் அந்த குரூப் வந்து அடிச்சிடக்கூடாதுன்னு, கலைஞருக்கு தொப்பி போட்டு, முழங்கால் வரை ஜிப்பா-கணுக்கால் வரை கைலி கட்டி, முஸ்லிம் வீட்டுப் பையன் மாதிரி ஆக்கி, ஒரு ரிக் ஷாவில் ஏற்றி பத்திரமா அனுப்பி வச்சிட்டாங்க.

மாநாட்டுத் தலைவர்கள் தங்கியிருக்கிற இடத்துக்கு கலைஞர் போறாரு. பெரியார் தூங்காம காத்திருக்காரு. பையனைக் காணோமேன்னு பதட்டமாவே இருந்தவரு, கலைஞரைப் பார்த்ததும் கட்டிப் புடிச்சி, ஆறுதல் சொன்னாரு. உடம்பெல்லாம் காயம்னு தெரிஞ்சதும் பெரியாரே கலைஞருக்கு மருந்து போட்டு விடுறாரு.

தந்தை பெரியாரோட தாயுள்ளத்தைப் பார்க்குறாரு கலைஞர்.

“இனி நீ எங்கேயும் போக வேணாம்.. என்னோட வா” -அப்படின்னு பெரியார் கூப்பிட, வாத்தியார் பேச்சைக் கேட்டு, கலைஞரும் ரெடி.

இனிமேதான் இருக்கு புதுப்புது வெடி…

(அலப்பறை தொடரும்)

(ஊடகவியலாளர் கோவி. லெனின் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட பதிவு)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *